எண்ணூர் துறைமுக எண்ணெய் கசிவு விவகாரம் – தீவிர நடவடிக்கை வெங்கய்ய நாயுடு உறுதி
சென்னை காமராஜர் துறைமுகப் பகுதியில் எண்ணெய்க் கசிவு விவகாரத்தை நேற்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி எழுப்பினார். இதையடுத்து இப்பிரச்சினையில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழியிடம் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு உறுதி அளித்தார்.
மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் கனிமொழி பேசும்போது, “ஜனவரி 29-ம் தேதி சென்னை காமராஜர் துறைமுகப் பகுதியில் கப்பல்கள் மோதிக்கொண்டதால் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. அன்றைய தினமே துறைமுகப் பொறுப்புக் கழகம் வெளியிட்ட செய்தியில், எண்ணெய்க் கசிவால் சுற்றுச் சூழலுக்கும் மீனவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது. 31-ம்தேதி துறைமுகப் பொறுப்புக் கழகம், எண்ணெய்க் கசிவை தூய்மைப் படுத்தும் பணிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளதாக கூறியது. இதுபோன்ற சம்பவங்களின்போது, அரசின் வெவ்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவ தில்லை. தற்போதைய தகவலின் படி சுமார் 35 கி.மீ. கடலோரப் பகுதிகள் எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் வாழ் உயிரினங்களான மீன்கள், ஆமை கள் போன்றவை செத்து மிதக் கின்றன.
இப்பகுதி மீனவர்களின் சுகாதாரமும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. தூய்மைப்படுத்தும் பணிகளில் கடலோரக் காவல் படைக்கும், துறைமுக நிர்வாகத்துக்கும், மீனவர் நலனை உள்ளடக்கிய மத்திய வேளாண் அமைச்சகத்துக்கும் இடையே ஒருங்கிணைப்போ, புரிந்துணர்வோ இல்லை. மேலும் இதுபோன்ற சம்பவங்களைக் கையாளும் திறமையான அதிகாரிகள் இதுவரை தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட வில்லை.
பணியில் தொய்வு:
பிரத்யேக அதிகாரிகளும், நவீன கருவிகளும் இல்லாத தால் தூய்மைப்பணி தொய்வடைந் துள்ளது. ஆரம்பத்தில் ஒரு டன் எண்ணெய்தான் கடலில் கலந்தது என்றனர். ஆனால் 25 டன்னுக்கும் குறையாத அளவு எண்ணெய் கடலில் கலந்துவிட்டதாக தற்போது தெரியவருகிறது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்” என்றார்.
கனிமொழி பேசி முடித்ததும் அவர் அருகே அமைச்சர் வெங்கய்ய நாயுடு சென்று, இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொண்டார். பிறகு, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தும் என்றும், தானே நேரடி கவனம் செலுத்துவதாகவும் உறுதியளித்தார்.