சைட்டம் குறித்து கடும் முடிவுகளை எடுக்க இன்று கூடுகிறது மருத்துவ சங்கம்
மாலம்பே தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் இன்றைய கூடி கடுமையான முடிவுகளை எடுக்க இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
மாலம்பே தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் (சைட்டம்)தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனு தொடர்பில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்தத் தீர்ப்பில் சைட்டம் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை மருத்துவ சபையால் பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்தப் பல்கலைக்கழகம் தரமற்றதால் இதில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என மருத்துவ சபையால் அறிவித்திருந்ததாக ஸ்ரீலங்கா மருத்துவ சங்கம் செயலாளர் நவிந்த த சொய்ஷா தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் பிரதிவாதிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, மருத்துவ சபையின் இந்த அறிக்கையை ஆராய்ந்து அதனடிப்படையில் நீதிமன்றத்திற்கு விளக்கம் அளித்திருக்க வேண்டும். ஆனால் சுகாதார அமைச்சர் அதனை மறைத்ததாலே இவ்வாறு வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு இவ்வாறு அமைய சுகாதார அமைச்சரே பொறுப்பு கூற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
எனவே இந்த தீர்ப்பு தொடர்பில் சட்டத்தரணிகள் ஊடாக ஆராய்ந்து மேன்முறையீடு செய்வது குறித்து முடிவு செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.