வடக்கு மாகாண மீனவ அபிவிருத்தி திட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தீர்மானம்
வடக்கு மாகாண நிலையான மீனவ அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து முற்பண கடனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்-
”வட. மாகாண நிலையான மீனவ அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் மூலம் வடக்கு மாகாணத்தின் 40,000 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.
இந்நிலையில், இத்திட்டத்தின் அடிப்படை வேலைத்திட்ட செயற்பாடுகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் முற்பண கடனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.