பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஒரு குடும்பத்தால் மட்டும்தான் சுதந்திரம் கிடைத்ததா? காங். மீது மோடி பாய்ச்சல்
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், ஒரு குடும்பத்தால் மட்டும்தான் சுதந்திரம் கிடைத்ததா? என காங்கிரசை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. அன்று பாராளுமன்றத்தின் கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.
பாராளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திரமோடி பேசினார். அப்போது காங்கிரசை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது:-
பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு குடும்பம் மட்டும்தான் நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்ததாக உறுப்பினர்கள் கூறினார்கள். சுதந்திரத்துக்காக காங்கிரஸ் போராடுவதற்கு முன்பே அதை பெற போராட்டம் நடத்தப்பட்டது. மக்கள் சக்தி சிறப்பு வாய்ந்தது. அதனால்தான் ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவர் பிரதமராக முடிந்தது.
சுதந்திர போராட்டத்தின் போது என்னை போன்றவர்கள் மரணம் அடையவில்லை. ஆனால் நாங்கள் நாட்டுக்காக சேவை செய்ய வாழ்கிறோம். காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டது. இறுதியாக பூமியில்தான் பூகம்பம் ஏற்பட்டு இருக்கிறது. கொள்ளையால்தான் பூகம்பம் ஏற்படுகிறது.
ஊழல் அடையாளத்தை வைத்துக் கொண்டு சிலரால் எப்படி நேர்மையான கொள்கைகளை பார்க்க முடியும். 1975-ம் ஆண்டு முதல் 1977 வரை ஜனநாயகம் எப்படி இருந்தது என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது.
இவ்வாறு மோடி பேசினார்.