சமஷ்டி வேண்டாம் என்ற முட்டாள்களே தமிழ் தலைவர்கள்
சமஷ்டி முறையிலான அரசியலமைப்பை வேண்டாம் என மறுத்துவிட்ட முட்டாள்களை ஆரம்பகால தலைவர்களாக கொண்ட இனம் தமிழ் இனம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முஹமத் அலி ஜின்னாவை போல 1948 ஆம் ஆண்டு பிடிவாதமாக நின்று தனிநாட்டை பெற முயன்று இருக்கலாம். அல்லது அன்று தென்னிலங்கை சிங்கள தலைவர்களே தர தயார் என தெரிவித்த சமஷ்டியையாவது பெற்று இருக்லாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் இடம்பெற்ற கொழும்பு கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
1987 ஆம் அண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, வடக்கு கிழக்கை இணைத்து தந்த தீர்வை நாம் புறக்கணித்தோம்.
அதேபோன்று 2000 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொண்டுவந்த தீர்வு, இன்று கிடைக்கும் என எதிர்பார்க்கும் தீர்வை விட முன்னேற்றகரமானது, அதையும் நாம் புறக்கணித்தோம்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொண்டு வந்த தீர்வை அன்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் எரித்து எதிர்ப்பை வெளியிட்டது என தெரிவிக்கும் நாம், அன்று தமிழர் விடுதலை கூட்டணியும் அதை ஆதரிக்கவில்லை என்பது பற்றி பேசுவதில்லை.
தமிழர் விடுதலை கூட்டணியிடம் இருந்திருந்து எட்டு வாக்குகள் கிடைத்திருந்தால், அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும்.
இறுதியில் 2005 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவை தேர்தலில் வெற்றி பெற விடாமல் செய்து, ஒஸ்லோ தீர்மான திட்டத்தையும் இழந்து விட்டோம்.
ஆகவே வரலாற்று முழுக்க சந்தப்பங்கள் கைநழுவி போய் விட்டன என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.