ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மாகாண சபைகளின் ஆளுநர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று விரைவில் நடைபெறவுள்ளது.
ஆயுட்காலம் முடிவடைகின்ற கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய ஆகிய மாகாண சபைகளின் ஆட்சியதிகாரத்தை ஆளுநர்களிடம் ஒப்படைப்பதே அரசின் திட்டமாக இருந்தது. எனினும், தேர்தல் நடைபெறும்வரை இடைக்கால அரசொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பில் அரசு இன்னும் உத்தியோகபூர்வமாக இறுதி முடிவெதையும் எடுக்கவில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆளுநர்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
இந்தச் சந்திப்பில் பிரதமரும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாகாண சபைகளின் அபிவிருத்தி, தேர்தல் நடைபெறும்வரை எப்படி நிர்வாகத்தை கொண்டு நடத்துவது என்பது உட்பட மேலும் பல விடயங்கள் இதன்போது ஆராயப்படவுள்ளன.
சப்ரகமுவ மாகாண சபை நேற்று நள்ளிரவுடன் கலைந்தது. கிழக்கு மாகாண சபை எதிர்வரும் சனிக்கிழமையும், வடமத்திய மாகாண சபை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடனும் கலைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சப்ரகமுவ, வடமத்திய ஆகிய மாகாணசபைகளின் ஆட்சியதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் இருக்கின்றது.
அத்துடன், கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைத்துள்ளன.