Sunday , August 24 2025
Home / முக்கிய செய்திகள் / சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க போவதாக கோப்பாப்பிலவு மக்கள் எச்சரிக்கை

சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க போவதாக கோப்பாப்பிலவு மக்கள் எச்சரிக்கை

சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க போவதாக கோப்பாப்பிலவு மக்கள் எச்சரிக்கை

 

தமது சொந்த காணியில் தங்களை மீள்குடியேற்றாத பட்சத்தில் நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோப்பாப்பிலவு குடியிருப்பு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களது காணிகள் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்காகமான முடிவினை எடுக்க வேண்டும் எனவும் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு கிராம மக்கள் நான்காவது நாளாகவும் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தமது காணிகளை மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமையிலிருந்து போராட்டத்தை பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட காணிகள் இன்னமும் மக்களிடம் கையளிக்கப்படாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

விமானப்படையினர் கையகப்படுத்தி வைத்திருந்த காணிகளை அளந்து கையளிப்பதற்காக காணி உரிமையாளர்களை நேற்றுமுன்தினம் குறித்த பகுதிக்கு வருமாறு கேப்பாபுலவு கிராம சேவை உத்தியோகத்தர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கமைய மக்கள் அங்கு சென்றிருந்த போதிலும், எந்தவொரு அதிகாரியும் காணிகளை அளந்து கையளிப்பதற்கு வருகைதராத நிலையில், தமது காணிகள் மீள வழங்கப்படுவது குறித்து உறுதி மொழி வழங்கும் வரை அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என தெரிவித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனையடுத்து வனவளத் திணைக்களத்தினருடன் கலந்துரையாடி காணிகளை வழங்குவது குறித்து அறிவிப்பதாக தொலைபேசி ஊடாக பிரதேச செயலாளர் சிவபாலன் குணபாலன் வழங்கிய உறுதிமொழியை ஏற்பதற்கும் மக்கள் மறுத்துள்ளனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை சம்பவ இடத்திற்கு சென்ற வன வளத் திணைக்கள அதிகாரிகள் குறித்த காணிகள் வன வளத் திணைக்களத்திற்கு சொந்தமானது அல்லவென்பதை உறுதிப்படுத்திய பின்னர் அவற்றை பிரதேச செயலாளரிடம் கையளிப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.

எனினும் அந்த உறுதிமொழியையும் ஏற்க மறுத்த பிலவுக்குடியிருப்பு மக்கள் அங்குள்ள இராணுவ முகாமிற்கு அருகில் கூடாரம் அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கரைதுரைபற்று பிரதேசசெயலர் ஆகியோர் அங்கு சென்று மக்களை சந்தித்து, இரண்டு வாரகால அனுமதி கோரியபோதும் அவகாசம் வழங்க மக்கள் நிராகரித்துள்ளனர்.

காணிவிடுப்பு தொடர்பில் தமக்கு ஏதும் தெரியாது என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளதாகவும், அனைவரும் கால அவகாசம் கோருவதாகவும் இவ்வாறு அவகாசம் கோரி, தமக்கு பொய், பித்தலாட்டம் காட்ட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை என மக்கள் தெரிவித்தனர்.

இராணுவம் தமது வருமானங்களை பெற்று வருவதாகவும், பாடசாலைணலய கூட விடாது தமது பிள்ளைகள் தாவாரத்தில் ஒதுங்கியிருந்து கல்வி கற்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தமது உயிர் போனாலும் குறித்த காணியை மீளப் பெற்றுக்கொள்ளும் வரை போராட்டத்தை கைவிட்டு அகலமாட்டோம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசுக்கு சொந்தமான 20 ஏக்கர் காடுகள் 2002 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த 84குடும்பங்களுக்கு 2003 ஆம் ஆண்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. எனினும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெயர்ந்த இந்த மக்கள் 2012 ஆம் ஆண்டு மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட போதிலும்,விமானப்படையினர் குறித்த காணிகளை கையகப்படுத்தி வைத்திருந்ததால் அவர்கள் தற்காலிக இடமொன்றில் தங்கவைக்கப்பட்டனர்.

ஆனால் தற்போது விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டும் இன்னமும் இந்த மக்களுக்கு காணிகள் கையளிக்கப்படாது தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை இந்த புலவுக்குடியிருப்பு கிராம மக்கள் மாத்திரமன்றி இறுதி யுத்தம் காரணமாக 2009 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த, முல்லைத்தீவு, கேப்பாப்புலவு கிராமத்தை சேர்ந்த 287 குடும்பங்களின் 500 க்கும் மேற்பட்ட காணிகளும் படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv