தற்கொலை செய்தால் சம்பந்தனே பொறுப்பு
தமது காணிகளை மீட்கும் தமது போராட்டத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கவனத்தில் எடுக்காமை குறித்து கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
நாளை மறுதினத்திற்குள் உரிய தீர்வு வழங்கப்படாது விடின் தீக்குளித்து தற்கொலை செய்யப்பபோவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏழாவது நாளாக இன்றைய தினமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கடந்த எட்டு ஆண்டுகாளக கையகப்படுத்தப்பட்டுள்ள பிலவுக்குடியிருப்பு கிராமத்திலுள்ள 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் குடியிருப்பு காணிகளையும் விவசாய நிலங்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை 31 ஆம் திகதி முதல் இந்த மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தமது போராட்டம் ஒரு வாரத்தை கடந்துள்ள போதிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் இதுவரை தமது கோரிக்கை குறித்து செவிமடுக்க முன்வரவில்லை என்றும் பிலவுக்கடியிருப்பு மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட கூட்டமைப்பின் தலைமைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தம்மை சந்திக்காதது குறித்து கடும் விசனம் வெளியிட்ட பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது தற்கொலை தடுப்பதற்கு சம்பந்தனால் மாத்திரமே முடியும் எனவும் தெரிவித்தனர்.
நாளை மாத்திரம் தான் இவ்வாறு தமது போராட்டம் தொடரும் எனவும் நாளை தமது போராட்ட வடிவம் முற்றாக மாறிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்காதது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது தம்மை அசிங்கப்படத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்ததாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது அரசியலுக்கு எதிரான தரப்பினரே இந்த போராட்டத்தின் பின்னால் இருப்பதாகவும், தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு செல்லாமைக்கும் இதுவே காரணம் என தெரிவித்திருந்தார்.




