மூழ்குகின்ற அரச கப்பலில் ஏறமாட்டாராம் கருணா
எந்தச் சூழ்நிலையிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடனோ, அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனோ இணைந்து செயற்ப டமாட்டேன் என்று கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டில் பிரிந்து சென்று, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருந்த கருணா, பின்னர் மஹிந்த அரசாங்கத்தில் பிரதிமைச்சராகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.
மஹிந்த ராஜபக்ச பதவியிழந்த பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து கருணா நீக்கப்பட்டிருந்தார்.
அதற்குப் பின்னர் முதல் முறையாக, கடந்த 27 ஆம் திகதி நுகேகொடவில் இடம்பெற்ற மஹிந்த ராஜபக்சவின் பேரணியில் கருணா பங்கேற்று, தற்போதைய அரசாங்கத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கடுமையாக விமர்சித்து உரையாற்றியிருந்தார்.
விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பை அழித்த தலைவர் மஹிந்த ராஜபக்சவே என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட முடிவு செய்தால், மகிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழேயே செயற்படுவேன் என்றும் வேறெவரின் கீழும் அரசியல் செய்யமாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரமும், பாதுகாப்பும் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு தற்போது மோசமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல அமைச்சர்கள் தன்னை அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டதாகவும் ஆனால் தான் மூழ்கிக் கொண்டிரு க்கும் கப்பலில் ஏற மாட்டேன் என்றும் கருணா குறிப்பிட்டுள்ளார்.