கர்நாடக சட்டசபை தேர்தல் தேர்தல் பட்ஜெட் சித்தராமையா நாளை தாக்கல்
கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முழுமையான கடைசி பட்ஜெட்டை முதல்மந்திரி சித்தராமையா நாளை தாக்கல் செய்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆட்சியின் முழுமையான பட்ஜெட்டை சித்தராமையா நாளை தாக்கல் செய்ய இருக்கிறார்.
முதல்மந்திரி சித்தராமையா 12-வது முறையாக நிதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், அம்மாநிலத்தில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்வதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் சட்டசபை வருகை குறைவாக இருப்பதாகவும், இது தொடர்பாக உரிய நோட்டீஸ் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். சட்டசபை வருகைப் பதிவேடுகள் ஒரு நாளுக்கு இருமுறை பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.