ஐ.நாவிடம் 18 மாத கால அவகாசம் கோரவுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம்
பொறுப்புக்கூறல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா அரசாங்கம் 18 மாத கால அவகாசம் கோரவுள்ளது.
இந்த நிலையில், கால அவகாசத்தைக் கோருவது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு விளக்கமளிக்கும் முகமாக மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை ஜெனிவாவுக்கு அனுப்ப ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சின் தகவல் அறியும் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
குறித்த குழுவில் நீதித்துறையில் பாண்டித்தியம் பெற்ற இருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நாவிற்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் நிக் கெலியை சந்தித்து ஸ்ரீலங்காவின் கால அவகாச கோரிக்கை தொடர்பில் மேற்படி குழுவினர் விளக்கமளிக்கவுள்ளனர்.
ஸ்ரீலங்கா விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இதுவரை அந்நாட்டின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிக்கவில்லை.
இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மௌனம் சாதிக்கவும் இடமுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐ.நாவில் கால அவகாசத்தைக் கோருவதற்கு இந்தியாவின் ஆதரவையும் ஸ்ரீலங்கா அரசு கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.