சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்
ஐ.நாவே கால அவகாசத்தைக் கொடுத்து சாட்சியங்கள் அழிந்து போக துணை நிற்காதே எனத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதம் இன்று ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பேரூந்து நிலையத்திற்கு முன்னால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், ஐ.நா வே பாதிப்புற்ற மக்கள் நாங்கள், சர்வதேச விசாரணையே வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பாதிப்புற்ற தமிழ் மக்கள் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு விடுக்கும் வேண்டுகோள் எனத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில்,
ஸ்ரீலங்கா படையினரால் எங்கள் சொந்தங்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, 30 இன் கீழ் 1 இன் தீர்மானத்தின்படி ஸ்ரீலங்கா அரசாங்கம் தன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான கால அவகாசத்தை கொஞ்சம் கூட நீடிக்காதீர்கள் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஏற்கனவே காலமும் இடமும் கொடுக்கப்பட்ட போதிலும் ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை கண்டுகொள்ளவே இல்லை என்றும் கால அவகாசத்தை நீடித்தாலும் அதன் விளைவாக பொறுப்புரைத்தலே இல்லாமல் போகும் என்றும் இந்த போராட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக தமிழ் மக்களுக்கு ஆபத்தே விளையும் என்றும் ஆகவே சர்வதேச விசாரணையே வேண்டும் என்றும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.