காணாமல் ஆக்கப்பட்ட சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசன சட்டமூலத்தை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சாசனத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு கடந்த ஏழாம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த சட்டமூலம், சட்டமாக ஆக்கப்படுவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்தது.
இந்த சாசனத்தின் பிரகாரம் காணாமல் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுகின்றமை குற்றவியல் குற்றமாக உள்ளுர் சட்டமாக கொண்டுவர வேண்டிய கடப்பாடு ஸ்ரீலங்காவிற்கு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இரண்டு கிளர்ச்சி செயற்பாடுகள் மற்றும் உள்நாட்டு யுத்தம் காரணமாக 65 ஆயிரம் பேர் வரை காணாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றும் ஓர் நடவடிக்கையாக காணாமல் ஆக்கப்படுகின்றமை குற்றவியல் குற்றமாக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.