Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வடக்கின் 4 அமைச்சர்களையும் ஒரேயடியாக நீக்கினால் விக்கியும் தனது அமைச்சு பொறுப்புகளை துறக்கவேண்டும்! – மாவை வலியுறுத்து 

வடக்கின் 4 அமைச்சர்களையும் ஒரேயடியாக நீக்கினால் விக்கியும் தனது அமைச்சு பொறுப்புகளை துறக்கவேண்டும்! – மாவை வலியுறுத்து 

“வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் ஒரேயடியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். வரம்பு மீறிச் செயற்படும் அவரின் இந்த நடவடிக்கையை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். விசாரணைக்குழுவின் பரிந்துரைக்கிணங்க குற்றவாளிகளான இரு அமைச்சர்களை மட்டும் அவர் பதவிநீக்கம் செய்து புதியவர்களை நியமிக்கவேண்டும். இதைவிடுத்து குற்றவாளிகளுடன் நிரபராதிகளான அமைச்சர்களையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாற்றினால் அவரும் தனது அமைச்சுப் பொறுப்புக்களை உடன் துறக்கவேண்டும். புதியவர்களை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அவர் வழிவிடவேண்டும்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி தொடர்பான விசாரணைக்குழு அறிக்கையில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் உடன் பதவி நீக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் கடந்த 7ஆம் திகதி வடக்கு மாகாண சபையில் அமர்வு நடைபெற்றிருந்தது. இந்த அமர்வில் விசாரணைக்குழுவின் அறிக்கையை முதலமைச்சர் விக்னேஸ்வரன் சபையில் சமர்ப்பித்து உரையாற்றியிருந்தார். அதன்போது தன்னால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு சரியாகத்தான் செயற்பட்டது எனவும், சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது எனவும், பரிந்துரைகளையும் விசாரணைக்குழுவினர் தந்துள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் விசேட அமர்வு இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டு அமைச்சர்களை மாத்திரமல்லாது, நான்கு அமைச்சர்களையும் ஒரேயடியாக மாற்றியமைக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிகளின்  தலைவர்களிடம் அமைச்சரவை மாற்றம் தொடர்பான தனது யோசனையை அவர் தொலைபேசியூடாகத்  தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான தன்னுடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இது தொடர்பில் இன்னமும் பேசவில்லை என்று மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் அதிக உறுப்பினர்களைக்கொண்டது கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான  இலங்கைத் தமிழரசுக் கட்சி. அந்தக் கட்சியின் தலைவரான என்னுடன் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன்   இன்னமும் பேசவில்லை. அவர் என்னுடன் பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவும் இல்லை. ஏனெனில், அவர் வரம்பு மீறிச் செயற்படுகின்றார். வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் பரிந்துரைக்கு மாறாகவும், கூட்டமைப்பின் கொள்கை மற்றும் கடப்பாட்டுக்கு முரணாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்பட்டு வருகின்றார்” என்றும் மாவை சேனாதிராஜா எம்.பி. குற்றஞ்சாட்டினார்.
“குற்றவாளிகளான அமைச்சர்கள் இருவருடன் நிரபராதிகளான ஏனைய இரண்டு அமைச்சர்களையும் சேர்த்து நான்கு அமைச்சர்களையும் ஒரேயடியாக  முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாற்றுவதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அவ்வாறு அவர் செய்தால் அவரும் தனது அமைச்சுப் பொறுப்புகளை உடன் துறக்கவேண்டும். புதியவர்களை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அவர் வழிவிட வேண்டும்” என்றும் மாவை சேனாதிராஜா எம்.பி. வலியுறுத்தினார்.
விக்கியின் நடவடிக்கைக்கு 
சுமந்திரனும் கடும் எதிர்ப்பு 
இதேவேளை, “விசாரணைக்குழு அறிக்கையின் தொடர் நடவடிக்கையாக வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் ஒரேயடியாக முதலமைச்சர் பதவி நீக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது பொருத்தமற்ற நடவடிக்கை. இது தொடர்பில் உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்துவதும் பொருத்தமற்ற செயல். கருத்துக் கேட்டு வாக்கெடுப்பு நடத்துவதும் பொருத்தமான நடவடிக்கை அல்ல” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
விசாரணைக் குழுவின் 
அறிக்கை குறித்த தன்னிலை 
விளக்கங்களை வழங்கவில்லை
இரண்டு அமைச்சர்ககளும் 
பதவி நீக்கப்படவேண்டும் என்று விசாரணைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா இருவரும் தமது தன்னிலை விளக்கங்களை  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எழுத்துமூலம் வழங்கவில்லை என்று தெரியவருகின்றது.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையில், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் பதவி நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. கடந்த 7ஆம் திகதி வடக்கு மாகாண சபையில் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்து  உரையாற்றிய முதலமைச்சர், அமைச்சர்கள் இருவரும் தமது தன்னிலை விளக்கங்களை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும் இதுவரை இரு அமைச்சர்களும் தங்களுடைய தன்னிலை விளக்கங்களை முதலமைச்சருக்கு எழுத்துமூலம் வழங்கவில்லை என்று தெரியவருகின்றது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …