கோவா,பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது
கோவா சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கும், பஞ்சாப்பில் காலை 8 மணிக்கும் ஓட்டுப்பதிவு துவங்கியது. காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர். இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கோவா :
முதல்வர், லட்சுமிகாந்த் பர்சேகர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் கோவாவில், சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடக்கிறது. மொத்தமுள்ள, 40 தொகுதிகளில், பா.ஜ., – காங்., – ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என, 250 வேட்பாளர்கள், களத்தில் உள்ளனர். பனாஜியில் மனோகர் பாரிக்கர் வரிசையில் நின்று ஓட்டளித்தார்.
பஞ்சாப்:
பஞ்சாபில், அகாலி தளத்தை சேர்ந்த, பிரகாஷ் சிங் பாதல் முதல்வராக உள்ளார். இங்கு, பா.ஜ., – அகாலிதளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், மொத்தமுள்ள, 117 தொகுதிகளிலும் இன்று, ஒரே கட்டமாக ஓட்டுப் பதிவு நடக்கிறது. கடந்த, 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அகாலிதளம் – பா.ஜ., கூட்டணி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளது. கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், நான்கு இடங்களில் வெற்றி பெற்ற, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக உள்ளன.
பலத்த பாதுகாப்பு:
மாநிலம் முழுவதும், போலீசார் மற்றும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள, 117 தொகுதிகளில், 1,145 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில், 81 பேர் பெண்கள்; ஒரு திருநங்கையும் களத்தில் உள்ளார். 1.98 கோடி வாக்காளர்கள், தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர்.
அடுத்த மாதம் முடிவு:
இந்த தேர்தலில், 11 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள், இன்று ஓட்டளிக்கவுள்ளனர். இந்த ஓட்டுகள் அனைத்தும், அடுத்த மாதம், 11ல் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகும். மத்தியில் ஆளும், பா.ஜ., அரசின் மூன்றாண்டு கால சாதனை, சமீபத்தில் வெளியான மத்திய பட்ஜெட், மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு உள்ளிட்ட பல அம்சங்கள், இந்த தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.