இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை : அமைச்சர் பைஸர் முஸ்தப்பா
இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை. அதன் காரணமாக சர்வதேச நீதிமன்றத்தையும், சர்வதேச நீதிபதிகளையும் சு.க. நிராகரிப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தப்பா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
முன்னாள் அரசின் வெளிவிவகாரக் கொள்கை நாட்டுக்குப் பாதகமாக அமைந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெளிவிவகாரக் கொள்கைப்படி பயணித்திருக்காவின் இந்த நாடு பாராதூரமான பிரச்சினைகளை சந்தித்திருக்கும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் இறையாண்மையையும் தனித்துவத்தையும் காட்டிக்கொடுக்க முயற்சிப்பதாக சிலர் கூறுகின்றனர். சர்வதேச நீதிபதிகளையும், விசாரணையாளர்களையும் ஒருபோதும் இலங்கை அனுமதிக்காது என்று ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
நாட்டில் சகவாழ்வை ஏற்படுத்த ஜனாதிபதி பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். மக்களின் மனங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே அவரின் நிலைப்பாடு. அதன்படியே செயற்படுகிறார். ஜனாதிபதி ஒருபோதும் இலங்கையின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க மாட்டார் என்றார்.