தேர்தலின்போது அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளுக்கு எதிரான வழக்கு
அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது வாடிக்கையான ஒன்றாகும். தற்போது உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல்களிலும் இலவசங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.
இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலின் போது இலவசங்களை அறிவிப்பதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த அசோக் சர்மா என்பவர் சார்பில் வக்கீல் மைத்ரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அரசியல் கட்சிகள் ஆட்சியை பிடிக்க இலவசங்களை அறிவிப்பது சுப்ரீம் கோர்டின் உத்தரவுக்கு எதிரானது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஜி. ரோகினி, நீதிபதி சங்கீத திங்கரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது.
இது தொடர்பாக 8 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை மே 24-தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.