“காணாமல்போனோர் அலுவலகத்துக்கு நியமிக்கப்படும் 7 ஆணையாளர்களில் 4 பேர் தமிழர்களாக இருக்கவேண்டும். எமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தரவேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வடக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் இடையேயான சந்திப்பு மன்னார் மாவட்ட ஆயர் இல்லத்தில் நேற்று இடம்பெற்றது.
சந்திப்பில் மன்னார்,வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
“காணாமல்போனோர் விடயங்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் உருவாகும் காணாமல்போனோர் அலுவலகத்துக்கு 7 ஆணையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் நால்வர் தமிழர்களாக இருக்க வேண்டும். அத்துடன் கொழும்பில் அமையும் அலுவலகத்துக்கு உள்ள அதிகாரத்தை ஒத்த கிளை அலுவலகம் வடக்கிலும் அமையப் பெற வேண்டும்.
எமது இந்தப் பிரச்சினைகள் தொடர்பிலும் எமது நிலைமைகள் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து எடுத்துக்கூற வேண்டும். அதற்கான ஏற்பாட்டை கூட்டமைப்பின் தலைவர் செய்து தரவேண்டும்” என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தினர்.
“காணாமல்போனோர் அலுவலகத்துக்கு 4 தமிழர்களை நியமிக்கும் விடயம் மற்றும் கொழும்பில் அமையும் அலுவலகத்துக்குள்ள அதிகாரத்தை ஒத்த ஓர் அலுவலகம் வடக்கிலும் அமையப் பெறவேண்டும் என்பவை தொடர்பில் விரைவில் பேச்சு நடத்திப் பதிலளிக்கப்படும். அதேநேரம் ஜனாதிபதியைச் சந்திப்பதற்குச் செல்லும் பிரதிகளின் விவரங்களைத் தயாரித்து வழங்கினால் அதற்கான ஏற்பாடு செய்து வழங்கப்படும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.


