Sunday , May 26 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஏமாற்றும் அரசுக்கு எதிராக ஒன்றித்துப் போராடுவோம்! – யாழ். பல்கலைக்கழக சமூகம் அழைப்பு

ஏமாற்றும் அரசுக்கு எதிராக ஒன்றித்துப் போராடுவோம்! – யாழ். பல்கலைக்கழக சமூகம் அழைப்பு

வடக்கு, கிழக்கில் மாகாணங்களில் இன்று நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு முழு ஆதரவை வழங்குவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆகியன அறிவித்துள்ளன.

யாழ். பல்கலை
ஆசிரியர் சங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,

“காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இதுவரை காலமும் காத்திருந்த உறவுகளுக்குத் தற்போதைய அரசும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

எனவே, அரசுக்கு நெருக்குதல் கொடுக்கும் வகையில் இன்று வியாழக்கிழமை நடக்கும் ஹர்த்தால் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை
அனைத்துப்பீட
மாணவர் ஒன்றிம்

வடக்கு, கிழக்கில் இன்று நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவ ஒன்றியம் அறிவித்துள்ளது.

“கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பாக இன்றுவரை எந்தவித உரிய நடவடிக்கைகளோ அல்லது அவர்களது உறவுகளுக்கு உரிய பதில்களோ வழங்கப்பட்டிருக்கவில்லை. அவர்களது உறவுகள் சுமார் 2 மாதங்களுக்கு மேலாக முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு இன்றுவரை எந்தவித பதிலும் உரிய தரப்பிலிருந்து கிடைக்கவில்லை. இந்தநிலையில், இன்று ஹர்த்தால் போராட்டத்துக்கு அந்த உறவுகள் அழைப்பு விடுத்துள்ளன. அவர்களது அழைப்பை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம்” என்று ஒன்றியம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை
ஊழியர் சங்கம்

வடக்கு, கிழக்கில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

“வடக்கு, கிழக்கில் நீண்ட நாட்களாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்தப் போராட்டங்களை அரசு கவனத்தில்கொள்ளவில்லை. அரசின் கவனத்தையும், சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் முகமாக இன்று ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களுக்கு எமது முழு ஆதரவையும் வழங்குகின்றோம்” என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …