முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் அறுவடை செய்யும் நெல்லை உலர வைப்பதில் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மாங்குளம் பகுதியில் நெல்லை உலரவைக்கும் தளங்கள் இல்லாத காரணத்தால் இவ்வாறு நெல்லை சாலைகளில் கொட்டி உலரவைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாலையருகில் நெல்லைக் கொட்டுவதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. வாகனச் சாரதிகள் முகம்சுளிக்கின்றனர் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வன்னி மாவட்டத்தில் தற்போது காலபோக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும் விவசாயிகள் ஆர்வத்துடன் அறுவடையில் ஈடுபட்டுள்ளனர். இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்படும் நெல்லை காயவிட்டே மூடைகளாக்கவேண்டும். பண்டைய கால அறுவடை முறையில் இவ்வாறு காயவைக்க வேண்டிய அவசியம் இல்லை.
எனவே, சகல இடங்களிலும் நெல் உலரவைக்கும் தளங்கள் அவசியமாகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.