ஈரோஸ் கட்சியின் வடமாகாண தலைமை அலுவலகம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு
ஈரோஸ் கட்சியின் வட.மாகாண தலைமை அலுவலகம் இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கனகபுரம் வீதியில் அமைந்துள்ள குறித்த தலைமையகம் இன்று காலை 10.30 மணியளவில் கட்சியின் செயலாளர் நாயகம் இரா. பிரபாகரனால் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய கட்சியின் செயலாளர் நாயகம், ‘இன்னமும் அரசியல் சக்தி தமிழ்தேசிய கட்சி என்று ஏமாற்றுகொண்டிருக்கின்றோமே தவிர அதற்கான தீர்வுகள் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் வழிமுறைகளையும் பெற்றுக் கொள்ளவில்லை.
வட கிழக்கு மலையகம் வாழ் தமிழ்பேசும் மக்களுக்கான தீர்வை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பதும் எத்தகைய அணுகுமுறை மூலம் பெற்றுக் கொள்வது என்பதும் எமக்கு தெரியும். தமிழ்மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ளும் இலகுவான வழிமுறைகளை நாம் ஏற்படுத்தியுள்ளோம். மக்களுக்கான சேவைகளையும் அபிவிருத்திகளையும் செய்வதற்காக இந்த தலைமையகத்தை திறந்து வைத்துள்ளோம்.
நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் சீர்திருத்தம் இடம்பெறுகின்றது. பல்வேறு கலந்துரையாடல்களின் பின்னர் இந்த புதிய அரசியல் சீர்திருத்தம் முடியும் தறுவாயில் வந்துவிட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும்.
அதுமட்டுமல்ல எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் புதிய முறையில் நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்காக தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். திறந்த வெளி அரங்கில் விவாதிக்கலாம். தமிழ்தேசிய கூட்டமைப்பின் கொள்கை என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்’ என்று தெரிவித்தார்.
நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.