37.500 கோடி ரூபாவை கடனாக பெற தீர்மானம்: முயற்சிக்கின்றது அரசாங்கம்
வரவுசெலவுத் திட்டத்தில் நிலவும் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இவ்வாண்டில் 37,500 கோடி ரூபாவை (2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) திரட்டுவதற்கு ஸ்ரீலங்காஅரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.
ஒன்றிற்கு மேற்பட்ட பல்வேறு மூலங்களில் இருந்து திரட்டப்படுகின்ற கடன்கள் மற்றும் அரச பிணையங்கள் மூலமாகவே இந்தத் தொகையை திரட்ட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.
பல்வேறு மூலங்களுடாக கடனாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை (1,5000 கோடி ரூபா) திரட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாகவும், இதனைவிட அரச பிணையங்களூடாக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (2,2500 கோடி) நிதியைத் திரட்டுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேர்ப்பர்ச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்திற்கு எதிராக சிஐடி விசாரணையும் இரு உள்ளக விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதுடன் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பாக பல்வேறு கருத்துக்களை மத்திய வங்கியின் ஆளுநர் வெளிப்படுத்திய அவர், ஸ்ரீலங்காவின் வெளிக்கடன் சூழ்நிலையானது சமாளிக்கூடிய நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனினும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகள் மூலமாக நாட்டிற்குள் கொண்டுவரும் நிதியின் அளவை அதிகரிப்பதே தற்போதுள்ள சவாலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா வெளிநாடுகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட வெளிக்கடன்களுக்கான மீள் கொடுப்பனவைச் செய்யும் விடயத்தில் ஸ்ரீலங்கா ஒரு போதுமே உரிய தவணையில் கொடுப்பனவைச் செய்யத்தவறவில்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஆனாலும் கடனை ஏற்படுத்தாத உள்ளீடுகளை அதிகரிப்பதே நாட்டின் முன்னாலுள்ள சவாலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
எமது குறுகிய கால கடன்கள் அதிகமாகவுள்ளதாகவும், கையிருப்புடன் ஒப்பிடுகையில் அது குறைவாக இருக்கவேண்டும் எனவே தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிக் கடன்களுக்கான மீள்கொடுப்பனவுகளைச் செய்யும் விடயத்திலும் அரசாங்கத்தின் நிதிநிலையில் காணப்படும் பலவீனத்தினாலும் ஸ்ரீலங்காவின் வெளிக்கடன் தொடர்பிலான நிலை தொடர்ந்துமே நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் விற்பனை மற்றும் கேந்திர ரீதியில் முக்கியத்துமற்ற ஹோட்டல்கள் மற்றும் வர்த்தக ஆதனங்களை விற்பனை செய்வதனூடாக இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான உள்ளீடுகளை நாட்டிற்குள் கொண்டுவரமுடியும் எனவும், அவர் சுட்டிக்காட்டினார்.
“இரண்டு முச்சக்கர வண்டிகள் உள்ள வீட்டில் கடன் சூழ்நிலை ஏற்பட்டால் வீட்டைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஒரு முச்சக்கர வண்டியை விற்று கடனைச் கடனை மீளச் செலுத்துவது போன்று நாட்டிலுள்ள சொத்துக்களை விற்பனை செய்து வெளிக்கடன் சூழ்நிலையை சமாளிக்கலாம்“ எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி விளக்கமளித்தார்.