மண்மீட்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: டெனிஸ்வரன்
கேப்பாபுலவு மண்மீட்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் பா. டெனிஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 14 நாட்களாக தமது சொந்த மண்ணை மீட்டெடுப்பதற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களை வடமாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரன் சந்தித்தார்.
கேப்பாபுலவு மக்களைச் சந்தித்து அமைச்சர் பா. டெனஸ்வரன் ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களின் போராட்டம் குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.
அத்துடன், போராட்டத்தில் ஈடுபடும் பெற்றோர் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்களின் நிலைப்பாடு குறித்தும், அவர்களுக்கான போக்குவரத்து தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, மாணவர்கள் தமக்கொரு நிலையான தீர்வு கிடைக்கும் வரை தாம் பாடசாலைக்கு செல்லப் போவதில்லை என்று கூறியிருந்தனர்.
பெற்றோர்களின் முடிவின் அடிப்படையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வார்கள் எனில், அதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் அதற்கான உதவிகளை செய்வதற்கு முன்வந்துள்ளதாகவும் அமைச்சர் பா. டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், து. ரவிகரன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் எஸ். சிவகரன், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.