சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சசிகலாவுக்கு வலுக்கிறது எதிர்ப்பு :
அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் மோடி மற்றும் தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.இந்நிலையில் சசிகலா தமிழக முதல்வர் ஆவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக, பா.ஜ.,வை தொடர்ந்து காங்கிரசும் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து காங்., தலைவர்கள் கூறியதாவது :
மல்லிகார்ஜூன கார்கே : சசிகலா நடராஜன் அந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. இவரை போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
ப.சிதம்பரம் : அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு எப்படி அவர்கள் தலைவரை தேர்வு செய்யும் உரிமை உள்ளதோ, அதே போல் தமிழகத்திற்கு முதல்வராக வருபவருக்கு என்ன தகுதி என கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு. தமிழக மக்களும், அதிமுக.,வும் எதிர்திசையில் சென்று கொண்டிருக்கின்றன. தமிழக முதல்வர் நாற்காலி காமராஜர், அண்ணாதுரை போன்றவர்கள் அமர்ந்து பெருமை சேர்த்தது. சுப்பிரமணிய சுவாமி : இடைத்தேர்தலில் மக்கள் ஓட்டு மூலம் சசிகலாவுக்கு எதிர்ப்பை காட்டலாம்.
அதிமுக துக்கவீடு :
பொள்ளாச்சியில் நிருபர்களிடம் பேசிய தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன்; அதிமுக துக்க வீடு மாதிரி உள்ளது. கொள்ளைப்புறம் வழியாக வரும் இவர்களுக்கு முதல்வராகும் தகுதி இல்லை. தொண்டர்களிடம் ஆதரவு இல்லை. உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடனான கூட்டு தொடரும். கனிமொழி எம்.பி., : மற்ற கட்சியின் உள்விவகாரத்தில் கருத்து சொல்ல ஏதும் விரும்பவில்லை. அதே நேரத்தில் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர்.
கார்த்தி சிதம்பரம் : சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக ஓபிஎஸ் கூறி இருக்கும் முதுகெலும்பு இல்லாத தனம் வேதனை அளிக்கிறது. தமிழக சட்டசபையை கலைத்து விட்டு, புதிதாக தேர்தல் நடத்தலாம். இது தமிழகத்திற்கே அவமானம். இனி தமிழகத்தின் தலைவிதி என்ன? அரசியல் சார்பற்ற இளைஞர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் குருமூர்த்தி : சசிகலா புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார். ஆனால் கொண்டாட்டம், பட்டாசு வெடிப்பு, மகிழ்ச்சி எதுவும் இல்லை. மாறாக அமைதி தான் நிலவுகிறது. ஒருவர் பதவிக்கு வருவதை கட்சிக்குள் இருப்பவர்களும், கட்சிக்கு வெளியில் இருப்பவர்களும் வெறுப்பதை ஒரு போதும் பார்த்ததில்லை.