காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் சேரவுள்ளதாக தகவல்
காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி விட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் சேரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சி தன்னை ஓரம் கட்டி விட்டதாக கூறி அக்கட்சியிலிருந்து விலகிய முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிருஷ்ணா விரைவில் பாஜகவுக்கு வருவார் என கர்நாடக மாநில பாஜக தலைவர் எதியூரப்பாவும் தெரிவித்துள்ளதால், கிருஷ்ணா கட்சி தாவப் போவது உறுதியாகி விட்டது. கர்நாடக காங்கிரஸ் தரப்புக்கு இது பெரும் சரிவாக கருதப்படுகிறது.
கடந்த வாரம்தான் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார் கிருஷ்ணா. தனது வயதைக் காரணம் காட்டி கட்சி தன்னை ஒதுக்கி விட்டதாக அவர் குற்றம் சாட்டி கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். மேலும் தனது விலகல் கடிதத்தையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கிருஷ்ணா அனுப்பி வைத்தார். இந்த நிலையில் அவர் தற்போது பாஜகவில் சேர முடிவெடுத்துள்ளார்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து எதியூரப்பா கூறுகையில், பாஜகவில் சேர எஸ்.எம்.கிருஷ்ணா முடிவு செய்துள்ளார். எப்போது என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. விரைவில் அது முடிவாகும். அவர் கட்சியில் இணைவது 100 சதவீதம் உறுதி என்றார் எதியூரப்பா. 84 வயதாகும் கிருஷ்ணா கர்நாடக முதல்வராக இருந்தவர். மத்திய அமைச்சராக மன்மோகன் சிங் அரசில் இடம் பெற்றிருந்தவர் ஆவார்.