இனப்படுகொலை தொடர்பில் பொறுப்புக்கூறல், நீதியை நிலைநாட்டுவதில் ஸ்ரீலங்கா தோல்வி
தமிழ் சமூகத்தையும் சர்வதேச சமூகத்தையும் பிரித்தாலும் தந்திரத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் கையாள்வதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நிழல் அமைச்சரவையின் நிதியமைச்சர் ஜோன் மக்டொனல்ட் தெரிவித்துள்ளார்.
தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழர் பிரச்சினை தொடர்பான மாநாடு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று உரையாற்றிய அவர், யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட விடயங்களில் உள்ளக விசாரணையை மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அந்த விசாரணைகளில் சுயாதீனத் தன்மை காணப்படுவதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்காவில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதோடு, அதற்கு பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய நிழல் வெளிவிவகார அமைச்சர், எமிலி தோன்பெரி ஸ்ரீலங்காவில் மனித உரிமை விடயத்தில் காத்திரமான முன்னேற்றங்கள் ஏற்படாத வரை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கக்கூடாது என வலியுறுத்தினார்.
இதேவேளை மாநாட்டில் உரையாற்றிய நிழல் வணிகத்துறை அமைச்சர் பெரி கார்டினர் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழியை ஸ்ரீலங்கா அரசாங்கம் மீறியிருக்கும் நிலையில், மீண்டுமொரு புதிய தீர்மானத்தை கொண்டுவருவதற்கு வாய்ப்பளிகக்கூடாது எனவும், இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயன் கருத்து வெளியிடுகையில், ஸ்ரீலங்காவில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை அந்த மக்கள் ஒருபோதும் மறக்கப்போவது இல்லையென குறிப்பிட்டார்.
தமிழ் மக்களுக்கு எதிராக முள்ளிவாய்க்கால் கடற்கரையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகவும், ஏனைய பிரதேசங்களிலும் இனப்படுகொலை இடம்பெற்றமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமற்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்பதோடு, நீதி மற்றும் பொறுப்புக்கூறலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும், நீதி தாமதப்படுவதாது நீதி மறுக்கப்படுவதாகவே அமையும் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இம்மாநாட்டில் தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் தலைவரான சென் கந்தையா உரையாற்றுகையில், ஸ்ரீலங்காவின் வடக்கு கிழக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு அலுவலகங்களை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இதன்மூலம் தமிழர் தாயகப் பிரதேசங்களில் வாழும் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்த முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரித்தானிய நிழல் அமைச்சரவையைச் சேர்ந்த நிதியமைச்சர் ஜோன் மக்டொனல் (John McDonnell), வெளிவிவகார அமைச்சர் எமிலி தோன்பெரி (Emily Thornberry), வணிகத்துறை அமைச்சர் பெரி கார்டினர் (Barry Gardiner) நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் ரயன் (Joan Ryan), மைக் கேப்ஸ் (Mike Gapes), வெஸ் ஸ்டீரிடிங் (Wes Streeting), ஸ்டீபன் டிம்ஸ் (Stephen Timms), லிஸ் மக்னஸ் (Liz McInnes), டோன் பற்லர் (Dawn Butler), தங்கம் டெபனொய்யர் (Thangam Debbanaire) மற்றும் தமிழர்கள் அமைப்பின் தலைவரான சென் கந்தையா ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.