மனித உரிமை கரிசனைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புகிறோம் – அலோக் சர்மா
ஸ்ரீலங்காவின் வட மேற்கு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரித்தானிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
மத ரீதியில் சிறுபான்மையாக உள்ளவர்களுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களையும் பிரித்தானிய கண்டிப்பதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக கனிஷ்ட இராஜாங்க அமைச்சர் அலோக் சர்மா கூறியுள்ளார்.
செயற்பாட்டு சுதந்திரம், நம்பிக்கை தொடர்பான மாற்றம் மற்றும் பகிர்தலில் பாரபட்சம் காட்டப்படாமை, உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போதே கனிஷ்ட இராஜாங்க அமைச்சர் அலோக் சர்மா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மனித உரிமை விடயங்களில் உள்ள கரிசனைகள் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக பிரித்தானியா கேள்வி எழுப்பி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக இராஜாங்க அமைச்சர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போது அனைத்து பிரஜைகளினதும் மனித உரிமைகளை பாதுகாப்பு தொடர்பில் வலியுறுத்தியதாக அலோக் சர்மா குறிப்பிட்டுள்ளார்.