மத வெறுப்புத் தாக்குதல்களை நடத்துவோருக்குத் தண்டனை!

மத வெறுப்புத் தாக்குதல்களை நடத்துவோருக்குத் தண்டனை! – அரசிடம் வலியுறுத்துகின்றது ஐரோப்பிய ஒன்றியம்

முஸ்லிம்கள் மீதான மத – இன வெறுப்புத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை அரசும் – பொலிஸாரும் உறுதிசெய்ய வேண்டும் என்று, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் மாங் தெரிவித்தார்.

தெவட்டகஹா பள்ளிவாசலுக்கு, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, நோர்வே, தென்னாபிரிக்கா, சுவிர்சர்லாந்து தூதரகப் பிரதிநிதிகள் நேற்று சென்றனர். அங்கு முஸ்லிம் தலைவர்களுடன் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இந்தப் பேச்சுக்களின்போதே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது என அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

முஸ்லிம் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்தே இந்தப் பயணம் இடம்பெற்றிருந்தது. இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் நீதியின் முன் விரைவாகக் கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரினர்.

“மத மற்றும் இன வெறுப்பின் விளைவுகளை இலங்கையர்கள் நன்றாக அறிவார்கள். தேசிய நல்லிணக்கமும், சகிப்புத் தன்மையும் முன்னோக்கிச் செல்லும் சந்தர்ப்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. வெறுக்கத்தக்க குற்றங்கள் எந்தத் தண்டனையிலிருந்தும் விலக்கானது அல்ல. இதனை அரசும், பொலிஸாரும் உறுதி செய்தல் அவசியம்” என்று தூதுவர் மாங் குறிப்பிட்டுள்ளார்.

About பார்த்தீபன்

View all posts by பார்த்தீபன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *