Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இனவாதம் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்! – வல்வெட்டித்துறையில் கூறினார் அமைச்சர் மங்கள

இனவாதம் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்! – வல்வெட்டித்துறையில் கூறினார் அமைச்சர் மங்கள

“எமக்கிடையில் இன நல்லிணக்கம் முக்கியமானது. நாட்டில் இன்று பலர் இனவாதக் கருத்துகளைப் பேசுகின்றனர். சிங்கள இனவாதமோ, முஸ்லிம் இனவாதமோ, தமிழ் இனவாதமோ இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.”

– இவ்வாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த ஆழிக்குமரன் குமார் ஆனந்தனின் நினைவாக, வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில், 75 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள நீச்சல் தடாகத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. அடிக்கல்லை நாட்டி வைத்ததன் பின்னர் மக்கள மத்தியில் உரையாற்றிய அவர்,

“இந்தக் குமார் ஆனந்தன், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்குப் பெருமை தேடித்தந்தவர். 1971ஆம் ஆண்டு பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இந்தியாவின் தமிழ்நாடுக்குச் சென்று மீண்டும் நீந்தி இலங்கையை வந்தடைந்தவர். இவரின் சாதனை உலகசாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தது.

கிரிக்கெட் விளையாட்டு வீரர்களான குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன் போன்றவர்களைப் போன்று, இப்படிப்பட்ட ஒருவர் வல்வெட்டித்துறையில் இருந்து சாதனை படைத்திருக்கின்றார். அவர் என்னுடைய சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நம் மத்தியில் இன நல்லிணக்கம் முக்கியமானது. இன்று நாட்டில் பலர் இனவாத கருத்துக்களை பேசுகின்றனர். சிங்கள இனவாதமோ, முஸ்லிம் இனவாதமோ, தமிழ் இனவாதமோ இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.

பருத்தித்துறையையும் தெய்வேந்திர முனையையும் இணைக்கும் பணியை நாம் அனைவரும் ஒன்றினைந்து மேற்கொள்ள வேண்டும்.

சாதனையாளர் ஆழிக்குமரன் குமார் ஆனந்தன், இன ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார். வல்வெட்டித்துறையில் வடக்கில் பிறந்து தெற்கில் திருமணம் முடித்து இன ஒற்றுமைக்கு வழிகோலியிருக்கின்றார். இலங்கையில் பிறந்து வளர்ந்த எனக்கு உங்கள் முன் தமிழில் பேச முடியாமைக்கு மனம் வருந்துகின்றேன்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …