உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் மற்றும் அவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் 2ஆம் திகதி அமைச்சர் பைசர் முஸ்தபாவால் வெளியிட்டப்பட்ட அரசிதழை இல்லாது செய்ய வேண்டும் என்று கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் விதானகமகே நந்தராஜா மனுவைத் தாக்கல் செய்தார்.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சின் செயலர், பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவம் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார, தேர்தல்கள் ஆணைக் குழுவின் உறுப்பினர்கள், சட்டமா அதிபர் உட்பட 8 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
“நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலர் பிரிவின் புதிய எல்லை நிர்ணயத்தால் பொதுமக்களுக்கும், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சிவனொளிபாத மலை உள்ளடங்கும் பிரிவில் சிங்களம், பௌத்தம் தொடர்பில் அடிப்படைப் பிரச்சினை காணப்படுகின்றது. இந்த எல்லை நிர்ணயம் மத நல்லிணக்கத்துக்குப் பாதகமாக அமைந்துள்ளது. நவம்பர் மாதம் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசிதழை இல்லாது செய்ய வேண்டும்.”- என்று அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.