ஆவா குழுவின் முன்னணி தலைவர்கள் தெற்கு நோக்கித் தப்பியோட்டம் – சிறிலங்கா காவல்துறை

யாழ்.குடாநாட்டில் சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், ஆவா போன்ற வாள்வெட்டுக் குழுக்களின் முக்கிய தலைவர்கள் தெற்கு நோக்கித் தப்பியோடத் தொடங்கியுள்ளனர்.

சிறிலங்கா காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆவா குழுவில் முன்னணியில் இருந்து செயற்பட்ட பலரும், யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள கைதுகள் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் நடவடிக்கைகளால், தெற்கிலுள்ள மாகாணங்களுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் மறைவிடங்களில் இந்தக் குழுவினர் பதுங்கியுள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கொக்குவிலில் சிறிலங்கா காவல்துறையினரை வெட்டிக் காயப்படுத்திய குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில், நான்கு பேர் நேற்றுமுன்தினம் இரவும், நேற்றும் கொழும்பில் புறக்கோட்டை மற்றும் மட்டக்குளி பகுதிகளில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடக்கம் யாழ். குடாநாட்டில் பரவலாக நடத்தப்பட்ட தேடுதல்களில், 50இற்கும் அதிகமானோர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *