வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கு புதிதாக 110 தாதிய உத்தியோகத்தர்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு 50 தாதிய உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும் வடக்கில் ஏற்கனவே கடமையாற்றுபவர்களில் 85பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று கொழும்பு உள்ளிட்ட மாகாணங்களுக்குச் செல்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்ததாவது:வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் தாதிய உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புமாறு நாம் நீண்டகாலமாக விடப்பட்ட கோரிக்கையின் பயனாக 110 தாதியர்கள் வடக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் 102பேர் மட்டுமே கடமைக்குச் சமுகமளித்தனர். வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றியதன் அடிப்படையில் 70 தாதிய உத்தியோகத்தர்கள் தற்போது வெளிமாகாணங்களுக்கு மாற்றலாகிச் செல்கின்றனர்.
அந்த வெற்றிடங்களுக்கு சமுகமளித்த தாதியர்களில் 70 பேர் நியமிக்கப்படவுள்ளனர். எஞ்சிய 32 தாதியர்களில் மாகாணத்தில் இயங்கும் குருதி சுத்திகரிப்பு வசதிகள் கொண்ட வைத்தியசாலைகளுக்கு 15 தாதியர்களும், தாதியர்கள் வெற்றிடமாகவுள்ள வைத்தியசாலைகளுக்கு ஏனைய 15பேரும் நியமிக்கப்பட வுள்ளனர் – என்றார்.