Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வலப்பனை பிரதேச சபை முன்னாள் தலைவர், சாரதிக்கு 12 வருட சிறைத்தண்டனை

வலப்பனை பிரதேச சபை முன்னாள் தலைவர், சாரதிக்கு 12 வருட சிறைத்தண்டனை

நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலை வரும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் வலப்பனை தொகுதி அமைப்பாளருமான ஜகத் குமார சமரஹேவா மற்றும் அவருடைய வாகன சாரதியாக செயற்பட்ட ஜடிலால் பெர்னாண்டோ ஆகியோருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனையை 23 ஆம் திகதி விதித்து தீர்ப்பளித்துள்ளது.

விவசாய திணைக்களத்துக்கு சொந்தமான ஜீப் வண்டியை கடந்த 2004 இல் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதுடன் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சொத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றத்துக்காக 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.யூ.பீ.கரலியத்த, 105 இலட்சம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 4 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.

கைத்துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 2 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 7 ஆயிரத்து 500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி உத்தரவிட்டார்.

2004 ம் ஆண்டு காலப்பகுதியில் உடபுஸல்லாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட ருவன் குணசேகர உள்ளிட்டவர்களினால் குறித்த நபர்களுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …