ஜம்மு காஷ்மீரில் கலவரக்காரர்களை கலைப்பதற்கு மிளகாய்ப்பொடி குண்டுகள் பயன் அளிக்கவில்லை என்றால் பெல்லட் துப்பாக்கிகளை ராணுவம் பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக கலவரத்தில் ஈடுபடுவோரைக் கலைப்பதற்காக பாதுகாப்பு படையினர் பெல்லட் ரக குண்டுகளை பயன்படுத்துகின்றனர். இந்த பெல்லட் ரக துப்பாக்கியில் இருந்து ஒருமுறை சுடும்போது, அது நூற்றுக்கணக்கான குண்டுகளை ஒரே சமயத்தில் அதிவேகத்தில் வெளியிடும். இந்த குண்டுகள் தாக்கினால் உயிர்ச்சேதம் ஏற்படாது. அதேசமயம், உடல் உறுப்புக்களை கடுமையாக பாதிக்கச் செய்து விடும். குறிப்பாக முகத்தில் படும்போது கண்பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது.
எனவே, இந்த குண்டுகளை பயன்படுத்துவதை தவிர்த்து வேறு வழிமுறைகளை கையாள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. எனவே, பெல்லட்டுக்கு மாற்றாக மிளகாய்ப் பொடி குண்டுகளை (பாவா ஷெல்) அறிமுகம் செய்தது.
இந்நிலையில், மக்களவையில் இந்த விவகாரம் எதிரொலித்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெல்லட் குண்டுகளை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தியதில், ஏராளமான மக்கள் பார்வையை இழந்துள்ளதால், மரணம் விளைவிக்காத ஆயுதங்களை மறுபரிசீலனை செய்யும் திட்டம் அரசுக்கு உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் ஜி.ஆஹிர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:-
மரணம் விளைவிக்காத ஆயுதமான பெல்லட் குண்டுகளால் அதிக பாதிப்பு ஏற்படுவதால், பிற சாத்தியமான மாற்று ஆயுதங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு 2016-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, கலவரக்காரர்களை கலைப்பதற்கு பாவா சில்லி (மிளகாய்ப் பொடி குண்டு), ஸ்டன் லேக் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. எனினும், இந்த ஆயுதங்கள் பயனற்றுப்போனால் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் தனது பதிலில் கூறியுள்ளார்.