முப்பது வருட யுத்தத்தின் பின் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டிருக்கும் இந்த நாட்டில் மீண்டும் ஓர் இரத்தக்களரியை உண்டாக்க அரசு இடமளிக்கக் கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“கடந்த சில வாரங்களாக முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீதும் வியாபார நிறுவனங்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் இனக்கலவரமொன்றுக்குத் தூபமிட்டு வருகின்றன. ஆரம்பத்திலேயே இந்த அசம்பாவிதங்களைக் கட்டுப்படுத்த அரசும் பொலிஸ் துறையும் தவறிவிட்டதாலேயே பிரச்சினை பூதாகரமாகியது. இந்த நாட்டில் வாழும் எந்தவொரு இனமும் மீண்டும் ஓர் இனக்கலவரத்தையோ இரத்தக்களரியையோ சந்திக்க விரும்பவில்லை. ஒருசில சுயநலவாதிகள் இனங்களுக்கிடையிலான அமைதியைக் குலைத்து குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். பொருளாதார ரீதியிலும் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இலங்கையில் மீண்டும் ஓர் இரத்தக்களரி ஏற்பட்டால் விளைவுகள் பாரதூரமாகிப் போய்விடும்.
முஸ்லிம்கள் இன்று அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த நாட்டில் அவர்களும் சமவுரிமை கொண்ட பிரஜைகள். நாட்டின் சகல துறைகளிலும் அவர்களது பங்களிப்பு இருந்து வந்துள்ளது. எனவே, அரசு மேலும் தாமதம் செய்யாமல் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியது அவசியம்” – என்று கூறியுள்ளார்.