ஊழல் வேண்டுமா அல்லது வளர்ச்சி வேண்டுமா? மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் – பிரதமர் மோடி
ஓட்டளிக்கும் முன்னர், ஊழல் வேண்டுமா அல்லது வளர்ச்சி வேண்டுமா என்பது குறித்து மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
ஊழலுக்கு எதிராக…: உ.பி., சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து மீரட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், வறுமை,ஊழலை முடிவுக்கு கொண்டு வரவே நமது போராட்டம் நடக்கிறது. இங்கு பிரசாரத்தை துவக்குவது பெருமையாக உள்ளது. சூப்பர் பவர் ஆகும் தகுதி நமக்கு உள்ளது. இந்தியாவை முதன்மை நாடாக மாற்றுவதற்குரிய நேரம் வந்துவிட்டது இந்த தேர்தலானது, மாபியா, குண்டர்கள், நமது சகோதரிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு எதிராக நடக்கிறது. கடந்த 2.5 வருடங்களில், மோடி பெயரில் ஊழல் நடந்துள்ளதா? நாட்டின் பெயரை கெடுக்க நான் எதுவும் செய்துள்ளேனா என கேள்வி எழுப்பினார்.
சந்தர்ப்பவாத கூட்டணி:
மேலும் அவர், மீரட்டில் வேலைக்கு செல்லும் மக்கள், உயிருடன் வீடு திரும்பவது குறித்து அச்சப்படுகின்றனர். கொலைகாரர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சித்தவர்கள், தற்போது அதற்கு காரணமாணவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். இது உடையும் கூட்டணி. அவர்கள் எவ்வாறு மாநிலத்தை காப்பாற்றுவார்கள். சம்ஜாவாதி – காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகவும் உள்ளது. நாம் பல கூட்டணிகளை பார்த்துள்ளோம். இவர்களை போன்ற கூட்டணியை யாராவது பார்த்ததுண்டா? அகிலேஷ் ஆட்சியில் வளர்ச்சி பணி எதுவும் நடக்கவில்லை. உ.பி., மக்களுக்கு ஊழல் வேண்டுமா அல்லது வளர்ச்சி வேண்டுமா என்பதை ஓட்டளிக்கும் முன்னர் சிந்தித்து பார்க்க வேண்டும். உ.பி., மக்களுக்கு நான் கடன்பட்டுள்ளேன் எனக்கூறினார்.