நல்லாட்சி என ஆட்சிசெய்யும் தேசிய அரசின் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றியும், முன்நோக்கி வந்த பயணம் குறித்தும் எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி விசேட அறிவிப்பொன்று வெளியாகவுள்ளது.
அரசின் சார்பில் மேற்படி அறிவிப்பை நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வெளியிடவுள்ளார். இதன்போது அரசின் வரிக்கொள்கைகள் பற்றியும் விவரிக்கப்படவுள்ளது என அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிப்பீடமேறி இம்மாத நடுப்பகுதியுடன் ஈராண்டுகள் கடந்துள்ளன.
இந்நிலையில், அரசின் பொருளாதார வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பில் மஹிந்த அணியான பொது எதிரணியும், ஜே.வி.பியும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இதனால், அரசின் செயற்பாடுகள்மீது மக்களுக்கு அதிருப்தியடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
எனவேதான், அரசின் எதிர்காலத் திட்டம், கொள்கைகள் பற்றி விளக்கமளிக்கும் வகையில் இந்த விசேட அறிவிப்பு வெளியாகவுள்ளது.
தேசிய இறைவரிச் சட்டமூலம் எதிர்வரும் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. எனவே, இது பற்றியும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெளிவுபடுத்துவார் என அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, 2018ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிப்பதற்காக பல்துறையினரிடமிருந்தும் ஆலோசனைகளை யோசனைகளைப் பெறுவதற்குரிய அழைப்பும் இதன்போது விடுக்கப்படவுள்ளது.