போரின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுதந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துகள், தங்கம் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் தம்மிடம் எந்தவொரு தகவலும் இல்லை என்று அரசு தெரிவித்தது.
நாடாளுமன்றம் நேற்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத்தாக்கல் ஆகியன முடிவடைந்த பின்னர் வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆரம்பமானது.
இந்நிலையில், நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் நேற்று நான்காவது தடவையாகவும் இது தொடர்பில் கேட்கப்பட்டிருந்தது.
இதற்கான பதிலை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சபையில் சமர்ப்பித்தார். இந்தப் பதில்களிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு தங்கம் எங்கேனும் நம்பிக்கைப் பொறுப்பில் வைப்பீடு செய்யப்பட்டதா?” என்று வாசுதேவ எம்.பி. எழுப்பியிருந்த கேள்விக்கு,
“யுத்தத்துக்குப் பின்னர் அகதிகளாக்கப்பட்டவர்கள் தங்குவதற்கான வசதிகள் வவுனியா மாவட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. இம்மக்களது சொத்துக்கள் மற்றும் ஆபரணங்கள் குறித்து எந்தவித தகவல்களும் வவுனியா மாவட்ட செயலகத்திடம் இல்லை என அது குறிப்பிட்டுள்ளது” என்று அமைச்சர் சுவாமிநாதன் பதில் அளித்தார்.
இதேவேளை, “தமது தங்கம் மற்றும் ஆபரணங்களைத் திருப்பிக்கொடுக்கவில்லை என மக்களின் முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கப்பெற்றுள்ளதா? இது தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என வாசுதேவ எம்.பி. எழுப்பிய மற்றொரு கேள்விக்கு, தகவல்கள் எதுவும் இல்லை எனவும், நடவடிக்கை எடுப்பது தனது அமைச்சுக்கு சம்பந்தப்பட்ட கேள்வி இல்லை எனவும் அமைச்சர் சுவாமிநாதன் பதில் அளித்தார்.