இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, அந்தப் பகுதி மக்கள் இன்று காலை முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராணுவத்தினரின் வாக்குறுதிகள் பொய்யான நிலையில் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தை அவர்கள் இன்று ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்புப் பகுதியில் படையினர் நிலைகொண்டுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி மக்கள் ஜனநாயக ரீதியில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
15 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முல்லைத்தீவு இராணுவ அதிகாரி கால அவகாசம் வழங்கியிருந்தார்.
மூன்று மாதங்களின் பின்னர் காணிகளை ஒப்படைப்பதாக அவர் வாக்குறுதி வழங்கினார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என நம்பிக்கை கொண்ட பொதுமக்கள் தமது போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டிருந்தனர்.
எனினும், இராணுவத்தினரால் கொடுக்கப்பட்ட கால அவகாச வாக்குறுதிகள் காலாவதியாகின. இந்தநிலையிலேயே மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகக் காணி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இன்று ஆரம்பமான போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனும் இணைந்துகொண்டார்.
“காலக்கெடு முடிஞ்சு போச்சு; எமது நிலம் எமக்கு வேண்டும்!”, “அரச அதிகாரிகளே கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? குப்பைக்குள்ளா?”, “அரச அதிகாரிகளே எமது காணி விடுவிப்புக்குக் கொடுத்த வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுங்கள்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
இதேவேளை, கேப்பாப்பிலவு மக்களின் மண் மீட்புப் போராட்டம் 8 மாதங்கள் கடந்தும் தீர்வின்றித் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.