தமிழ் முஸ்லீம் மக்களின் வாக்கு எமக்கு தேவை இல்லை – நாம் அமோக வெற்றி பெறுவோம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கத்தை தற்துணிவுடன் ஸ்தாபிக்கும். எமது வெற்றியில் தமிழ் – முஸ்லிம் மக்கள் பங்காளிகளாக வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவு இல்லாமல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று காலம் காலமான குறிப்பிட்டு வந்த விடயத்தை ஜனாதிபதி தேர்தலின் ஊடாக மாற்றியமைத்தோம்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு பெரும்பாலான தமிழ்- முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கவில்லை. தனி பௌத்த மக்களின் ஆதரவின் ஊடாகவே ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.
ராஜபக்ஷர்களின் ஆட்சி தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் தங்களின் அரசியல் சுய தேவைகளுக்காக தவறான சித்தரிப்புக்களை முன்னெடுத்தார்கள். தவறான அரசியல் நிலைப்பாடுகளில் இருந்து சிறுபான்மை மக்கள் தற்போது விடுப்படுவதை அவதானிக்க முடிகிறது.
ராஜபக்ஷர்களின் ஆட்சி மீண்டும் தோற்றம் பெற்றால் சிறுபான்மை மக்களுக்கு எதிரான இன அடக்கு முறைகள் முன்னெடுக்கப்படும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஐக்கிய தேசிய கட்சியினர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்தார்கள்.
தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படவில்லை. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நாட்டு மக்கள் அனைவரையும் சமமாகவே பாவிக்கிறார்.
இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலை தொடர்ந்து ஜனாதிபதியுடன் இணக்கமாக செயற்படும் நிலையான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் ஸ்ரீலங்கா பொதுதுஜன பெரமுன பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெறும் இதில் தமிழ்- முஸ்லிம் சமூகத்தினர் பங்குக் கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
ஐக்கிய மக்கள் சக்தியை காட்டிலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் ஆதரவு தற்போது கணிசமான அளவு உள்ளது இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் சஜித் அணியினர் ஜனாதிபதி தேர்தலில் எடுத்த வாக்கினை காட்டிலும்’ குறைவான வாக்குகளை பெற்று படு தோல்வியடைவார்கள் என்றார்.