உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நாம் தலைவணங்குகின்றோம். மக்கள் எமக்கு வழங்கிய எச்சரிக்கையாகவே தேர்தல் முடிவினை கருதுகின்றோம்.
இது தொடர்பில் ஆழ்ந்து சிந்தித்து எமது செயற்பாடுகளை சரியான முறையிலும் வேகமாகவும் முன்னெடுக்க நாம் பாடுபடுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டில் சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கு மக்கள் எமக்கு பொறுப்பு வழங்கினர். அதே மக்கள் ஆணை அவ்வாண்டின் ஆகஸ்ட் மாதமும் கிடைக்கபெற்றது. இந்நிலையில் எமது மீது சுமத்தப்பட்ட பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.
இதன்படி இரு முறை மக்கள் ஆணையை வழங்கி எம் மீது சுமத்திய பொறுப்புகள் அனைத்தையும் உரிய முறையில் நிறைவேற்றுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் அமைச்சர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.