தொடர்கின்றது கேப்பாப்பிலவு மண்மீட்புப் போர்!
கேப்பாப்பிலவு மக்கள் முன்னெடுத்துவரும் மண்மீட்பு அறவழிப் போராட்டம் பேரெழுச்சியுடன் தொடர்கின்றது.
“அடிப்படைத் தேவைகளையே போராடித்தான் பெறவேண்டும் என்றால் அபிவித்தி எப்போது?” என்று கேப்பாப்பிலவுப் போராட்டக் களத்தில் வைத்துக் கேள்வி எழுப்பிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்களைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் நேற்று அங்கு கவனவீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கேப்பாப்பிலவில் உள்ள தங்கள் பூர்வீக நிலங்கள் 482 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரிக் கேப்பாப்பிலவு மக்கள் தொடர் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் போராட்டம் நடக்கும் இடத்துக்கு நேரில் சென்று தமது ஆதரவைத் தெரிவித்ததுடன் தேசிய அரசுக்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இராணுவத்தின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் – வீதிப்போக்குவரத்தைக் குழப்பாமல் இராணுவ முகாம் நுழைவாயிலில் இருந்து 100 மீற்றருக்கு அப்பால் நின்று மாணவர்கள் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“அரச காணிகள் இருக்கும்போது மக்களின் காணிகள் எதற்கு?”, “கேப்பாப்பிலவு மக்களின் அகதி வாழ்க்கைக்கு முடிவில்லையா?”, “அடிப்படைத் தேவைகளையே போராடித்தான் பெறவேண்டும் என்றால் அபிவிருத்தி எப்போது?”, “இராணுவத்தின் தேவைக்காக தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதா?”, “இராணுவம் என்பது மக்கள் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கு அன்றி ஆக்கிரமிப்பதற்கு அல்ல” போன்ற வாசகங்களை ஏந்தியவாறு அவர்கள் தமது கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
மக்களின் அமைதிவழிப் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவு தொடர்ச்சியாக இருக்கும் என யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ். ஜசோதரன் தெரிவித்தார்.

