தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை கொழும்பிற்கு மாற்றுவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அநுராதபுரம் விசேட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் காலதாமதமாவதாகவும், அதனால் அநுராதபுரம் விசேட நீதிமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கைதிகளின் வழக்குகளையும் கொழும்பிற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வீர்களா எனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரால் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த நீதியமைச்சர், இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது எனவும், அதன்படி இது குறித்து விரைவில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.