பதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்!
தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைமை பதவியில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நீடிப்பதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
எனினும், விக்னேஸ்வரன் இணைத்தலைவர் பதவியை துறப்பதை பேரவைக்குள் ஒரு அணி விரும்பவில்லை.
என்பதோடு விக்னேஸ்வரனே இணைத்தலைமையில் நீடிக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள்.
யாழில் நாளை மறுநாள் எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளாதவர்களால், விக்னேஸ்வரனின் இணைத்தலைமை குறித்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இதையடுத்து, அவர் இணைத்தலைமை பதவியை துறக்கும் முடிவிற்கு வந்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
அதேவேளை, எழுக தமிழின் பின்னர் இணைத்தலைமையை துறப்பது, வெளி அழுத்தங்களின் பின்னர் விக்னேஸ்வரன் விலகுவதாக கருதப்பட்டு விடும், அதனால் உடனடியாக பதவியை துறவுங்கள் என்றும் இன்னும் சிலர் ஆலோசனை கூறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த்ந் நிலையில் நீண்ட ஆலோசனையின் பின்னர், எழுக தமிழ் நிகழ்வு முடிந்ததும் உடனடியாகவே இணைத்தலைமைய துறக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தமிழ் மக்கள் பேரவையை- அனைத்து தரப்பையும் உள்ளடக்கியதாக- கூட்ட வேண்டுமென பல்கலைகழக மாணவர் ஒன்றியம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளது.
அதில் கலந்துகொள்ள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் மாணவர் பேரவை அழுத்தம் கொடுத்த நிலையில், அதனை ஏற்றுக்கொண்ட முன்னணி, பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வதாக வாக்களித்திருந்தது.
இதேவேளை கடந்த சில தினங்களின் முன்னர் வரை, பேரவை கூட்டத்தை கூட்ட இரண்டுமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அது வெற்றியளிக்காத நிலையில் ,எழுக தமிழ் பேரணி முடிந்ததன் பின்னர் அடுத்துவரும் சில நாட்களில் தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இணைத்தலைமையை துறக்கும் அறிவித்தலை விக்னேஸ்வரன் விடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.