ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான சர்வதேச நீதிமன்றம் மற்றும் சமஷ்டித் தீர்வுக்கான அரசமைப்பை ஏற்படுத்தி விட வேண்டும் என்ற அபாயகரமான உள்நோக்கத்தோடு தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவிற்கு இரண்டு வருடக்கால அவகாசம் வழங்கப்பட்டதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அதேவேளை ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பிலான தகவல்களை 8 வருடங்களுக்கும் மேலாக மறைத்த குற்றத்துக்காக அமைச்சர் சரத் பொன்சேனாவை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிவிருது ஹெல உறுமயக் காரியாலயத்தில் இன்றையதினம் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில, ஜெனீவா மாநாட்டில் தமக்கு வெற்றி கிடைத்து விட்டது எனக் கூறி, ஆனந்தக் கண்ணீர் வடித்துக்கொண்டு அரசாங்கம் தற்போது துள்ளிக் கொண்டிருக்கின்றது.
2015 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற தமக்கு 2 வருடகால அவகாசம் வழங்கப்பட்டமையானது இராஜதந்திர ரீதியிலான வெற்றி எனவும் அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றது.
இதன்மூலம் சர்வதேசத்தின் ஊடாக சதிவலையொன்று ஸ்ரீலங்காவிற்கு எதிராக பின்னப்பட்டுள்ளமையை அரசாங்கம் இன்னும் உணரவில்லை.
அதாவது நாடானது தற்போது பாரிய பொருளாதார வீழ்ச்சியை நோக்கி பயணிக்கின்றது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு கசப்பான உண்மையாக இருக்கின்றது.
இதனால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்தே ஆகவேண்டும் என்ற சூழலும் உருவாகியுள்ளது. இவ்வாறான நிலையில் இன்னும் சிறுது காலத்திலேயே நாட்டில் பாரியளவிலான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டவுடன் உலக வங்கியூடாக ஸ்ரீலங்காவிற்கு கடன் வழங்க மேற்குலக நாடுகள் முன்வரும்.
இவ்வாறு உதவி செய்பவர்கள் சமஷ்டித் தீர்வை முன்வைத்த அரசமைப்பு உருவாக்கப்படல் வேண்டும் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச நீதிமன்றமொன்றை அமைக்க வேண்டும் என்று கடனுக்கான நிபந்தனைகளை விதிப்பார்கள்.
நாட்டில் நிலைமை மோசமாக இருக்கும் காரணத்தினால் அரசும் இந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும்.
ஏனெனில் 1998 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, அந்நாட்டுக்கு கடன் வழங்க முன்வந்த உலக வங்கியானது இந்தோனேசியாவிலிருந்து கிழக்கு தீமோரை பிரிக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தான் முதலாவதாக விதித்தது.
பசியால் வாடிய அம்மக்களும் இவற்றை எப்படியாவது நிறைவேற்றுமாறு வீதியில் இறங்கி அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமையால் கிழக்கு தீமோர் இந்தோனேசியாவிலிருந்து பிரிக்கப்பட்டது.
இவ்வாறான ஒரு நிலைமைத் தான் ஸ்ரீலங்காவிற்கு ஏற்படும். எமது நாட்டு மக்களினாலேயே சர்வதேச நீதிமன்றமொன்று வேண்டும், சமஷ்டித் தீர்வொன்று வேண்டும் என்று கூறவைப்பதற்காகவே சர்வதேசம் ஸ்ரீலங்காவிற்கு அடுத்த இரண்டு வருட காலத்தை வழங்கியுள்ளது.
அதுவும் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கான சூழல் எமது நாட்டில் இப்போதைக்கு இல்லாத காரணத்தினால் தான் இந்தக் காலமும் வழங்கப்பட்டது.
எனவே, இதன் பாதகத் தன்மையை உணர்து அரசு அவதானத்துடன் செயற்பட வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.
அதேநேரம், லசந்தவின் கொலை தொடர்பில் வாக்குமூலமளித்த அமைச்சர் சரத்பொன்சேகா, தனக்கும் இக்கொலைக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. மாறாக ஜெனரால் கபிலேந்திர வித்தாரண என்பவரினால் இயக்கி வரப்பட்ட கொலைக் குழுவினாலேயே இவர் கொல்லப்பட்டார் என்று கூறியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு சம்பவம் தொடர்பிலேயே சரத்பொன்சேகா 2017 இல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதாவது, இத்தனைக் காலமாக அவர் இவ்விடயங்களை வெளிக்காட்டாமல் இருந்துள்ளார் என்பதே இதன் மூலம் உறுதியாகின்றது. இதற்காகவே இவரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றார்.