இனி 10 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சியை கைப்பற்ற முடியாது
ஐக்கிய தேசிய கட்சி தற்போது ரணில் , சஜித் , கரு என மூன்றாகப் பிளவடைந்துள்ளது. இவ்வாறான பிளவுகள் தொடர்ந்தால் அவர்களால் அடுத்த பத்து வருடங்களுக்கு ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போகும் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார , பெரும்பான்மையுடைய ஸ்திரமான அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதைய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. எனவே வரவு – செலவு திட்டத்தை சமர்பித்தாலும் அதனை நிறைவேற்ற முடியாது. ஐக்கிய தேசிய கட்சி தற்போது ஆதரவளிப்பதாகக் கூறினாலும் சமர்பிக்கப்பட்ட பின்னர் ஏதாவதொரு காரணத்தைக் கூறி எதிராக வாக்களித்துவிடுவார்கள்.
ஜே.வி.பி.யும் தமிழ் தேசிய கூட்டணியும் கூட எமக்கு ஆதரவளிக்காது. எனவே விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
ஐக்கிய தேசிய கட்சி தற்போது ரணில் தரப்பு, சஜித் தரப்பு , கரு தரப்பு என மூன்றாகப் பிளவடைந்துள்ளது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நாம் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியை ஸ்தாபித்திருக்கின்றோம். எதிர்க்கட்சி பலமற்றதாக இருப்பதால் இப் புதிய கூட்டணியில் எம்மால் இலகுவாக முன்னோக்கிச் செல்லக் கூடியதாக இருக்கும்.
ஸ்ரீலங்கா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் பிரிதொரு கட்சிக்கு ஆதரவளிக்காது. எமது பலத்தால் எதிர்வரும் 10 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சியைக் கைப்பற்ற முடியாது.