2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு போட்டியிட முடியாததால், நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்தே அவ்வணியினர் காய்நகர்த்தி வருகின்றனரென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”இந்த நாட்டில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மக்களிடம் நம்பிக்கையற்று போனவர்களே இன்று பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்துள்ளனர்.
சுமார் 9 வருட காலமாக ஆட்சியை கொண்டுசென்ற மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரை, தற்போதைய ஆட்சிக்காலத்தில் அதிகமாக நீதிமன்றங்களிலேயே பார்த்திருப்பீர்கள். ஊழல் – மோசடிகளில் ஈடுபட்டவர்களும், பொதுச் சொத்துக்களை சூறையாடியவர்களுமே இன்று நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்துள்ளனர்.
விமல் வீரவன்ச, பஷில் ராஜபக்ஷ, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன போன்றோர் எவ்வாறான வழக்குகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.
இவர்கள் தற்போது இவ்வாறு நடந்துகொள்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்.
அந்த தேர்தலுக்குச் சென்றால் மஹிந்த ராஜபக்ஷ நெருக்கடிக்குள்ளாவார். அவரால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. அதனால், பிரதமர் பதவியை பெற்றக்கொள்வதற்காக நாடாளுமன்ற தேர்தலுக்கு எவ்வாறு செல்வதென மஹிந்த உள்ளிட்டோர் முயற்சித்து வருகின்றனர்.
அண்மைய காலமாக பாத யாத்திரை மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்தமைக்கு இதுவே காரணம். சைட்டம் பிரச்சினையை உருவாக்கியதே மஹிந்த ராஜபக்ஷதான். ஆனால், தற்போது சைட்டத்திற்கு எதிரான தரப்பினருடன் கைகோர்த்து பல முயற்சிகளை மேற்கொண்டார். அதுவும் தோல்வியில் முடிவடைந்தது.
உள்ளுராட்சிமன்ற தேர்தலில் 113 உறுப்பினர்களை கொண்டுவந்தால் பிரதமர் பதவியை தருவதாக ஜனாதிபதியே குறிப்பிட்டார். ஆனால், அதனையும் செய்யமுடியவில்லை. 113 பேருடன் பெரும்பான்மையை நிஷரூபிக்க முடியாதவர்களால் எவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொள்ள முடியும்?
இழந்த பலத்தை பறித்துக்கொள்வதற்கு அல்லது மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு இவர்கள் செய்யும் சூழ்ச்சிகளே இவை” என்றார்.