Monday , October 20 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்துவது எப்படி? – கால அட்டவணை தயாரிக்கவுள்ளது கூட்டமைப்பு

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்துவது எப்படி? – கால அட்டவணை தயாரிக்கவுள்ளது கூட்டமைப்பு

இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்தில், ஐ.நா. தீர்மானத்தை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கால அட்டவணையைத் தயாரிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

வடக்கில் நடைபெறும் தொடர் போராட்டங்கள் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் அவசரமாகச் சந்திப்பதற்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாவது:-

“மூன்று விடயங்கள் ஆராயப்பட்டன. அரசமைப்பு விவகாரத்தில் என்ன நடைபெறுகின்றது என்பது தொடர்பில் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்த 2 வருடங்கள் இலங்கைக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலப் பகுதியில் தீர்மானத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் கால அட்டவணையை கூட்டமைப்பு தயாரிக்கவுள்ளது. இதனை இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் வழங்கத் தீர்மானித்துள்ளோம்.

வடக்கில் காணி விடுவிப்புக்கான தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. எமது உறுப்பினர்களை, காணி விடுவிப்பு தொடர்பான விவரங்களை மூன்று நாட்களில் திரட்டச் சொல்லியுள்ளோம். அது கிடைக்கப்பெற்றதும் அரசுக்குக் கடிதம் அனுப்பவுள்ளோம். அத்துடன் ஜனாதிபதியையும், பிரதமரையும் நேரில் சந்தித்துப் பேசவும் முடிவு செய்துள்ளோம்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …