நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த ஐ.நா. தீர்மானம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்கு உரிய ஆவணங்கள் சதிகம் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவைக்கு வந்திருந்தார்.
எனினும், விவாதம் நடைபெறாது தடைப்பட்டதால் அவர் மிகுந்த கவலையடைந்தார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணி எம்.பியான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று மஹிந்த அணியான பொது எதிரணியால் ஐ.நா. தீர்மானம் தொடர்பில் ஒத்திவைப்பு வேளை விவாதம் கொண்டுவரப்பட இருந்தது. எனினும், விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள விதம் தொடர்பில் எழுந்த சர்ச்சையால் நாளை வெள்ளிக்கிழமை 10.30 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதன் பின்னர் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள ஊடகவியலாளர்களின் அறைக்கு வந்த பொது எதிரணி உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, நாமல் ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும மற்றும் ஜயந்த தர்தாச ஆகியோர் சபையில் நடந்தவற்றை ஊடகவியலாளர்களிடம் எடுத்துரைத்தனர்.
இதன்போது, நடந்த சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளது என ஊடகவியலாளர் ஒருவர் தினேஷ் குணவர்தன எம்.பியிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அவர்,
“இது அசாதாரணமானதாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் என்னிடம் குறிப்பிட்டார். சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைக்கும் தரப்புக்கு குறைந்தபட்சம் 45 நிமிடங்களாவது வழங்கியிருக்க வேண்டும் என சம்பந்தன் தெரிவித்தார்.
அநுரகுமார திஸாநாயக்க தனது பதவியைத் (எதிர்க்கட்சி பிரதம கொறடா) தக்கவைத்துக்கொள்வதற்காகவே பேசுகின்றார். பொது எதிரணியைக் கட்சியாக ஏற்றுக்கொண்டே கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் எமக்கு அங்கத்துவம் வழங்கப்பட்டடுள்ளது. இந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நாங்களே கொண்டு வந்தோம். அதற்கான நேரம் வழங்கும்போது மாத்திரம் நொண்டிச்சசாட்டுக் கூறுகின்றனர்.
நாட்டுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டுவரப்பட்டுள்ள யோசனையில் உள்ள பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டியுள்ளது. அதற்கமையவே இந்த விவாதத்தைக் கொண்டு வந்தோம். இதில் பேசுவதற்காக நான், நாமல், டலஸ், ஜயந்த தரமதாச ஆகியோர் தயாராகி இருந்தோம். எனினும், 210 மொத்த நிமிடங்களில் எமக்கு வெறுமனே 32 நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கபட்டுள்ளது. இதில் நான் யோசனை முன்வைப்பதற்கே இந்த நேரம் போதாமல் இருந்தது” – என்றார்.
அதேவேளை, ஐ.நா. தீர்மான விவாதத்தில் உரையாற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தயார் நிலையிலேயே இருந்தது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அக்கட்சியின் எம்.பிக்கள் பலரும் அவைக்கு வந்திருந்தனர். குறிப்பாக பல ஆவணங்களைச் சபைக்குள் கொண்டு வந்து – தமது தரப்பு நியாயத்தை தெளிவுபடுத்துவதற்கு சம்பந்தன் தயார்நிலையிலேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.