நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புக்கூறல் அவசியம்! – ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா வலியுறுத்து
“வடக்கிலிருந்து படையினரை அகற்றுதல், காணாமல்போனோர் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.”
– இவ்வாறு சிறுபான்மை இன மக்கள் விவகாரங்கள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா தெரிவித்தார்.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 34ஆவது கூட்டத்தொடரில் நேற்று நடைபெற்ற அமர்வில் இலங்கை தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“போருக்குப் பின்னரான ஒரு நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு உண்மையைக் கண்டறிதல், காயங்களை ஆற்றுதல் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் அவசியம்.
இலங்கையில் குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படாத நிலைமை தொடர்ந்து காணப்படுகின்றது. இது சமூகங்களுக்கு மத்தியில் நம்பிக்கையீனத்தை அதிகரித்துள்ளது.
தமிழ், முஸ்லிம், இந்தியத் தமிழர்கள் மற்றும் சிறு அளவிலான சிறுபான்மை இன மக்கள் திட்டமிடப்பட்ட சமூக மற்றும் அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர். விசேடமாக சிறுபான்மை இனப் பெண்கள் உண்மைக்கும், நல்லிணக்கத்துக்காகவும் போராடுகின்றனர்.
இலங்கையின் சிறுபான்மை இன மக்களைப் பாதுகாப்பதற்கான வலுவான வேலைத்திட்டங்களை முன்வைப்பதில் தனது அர்ப்பணிப்பை இலங்கை அரசு வெளிக்காட்ட வேண்டும். விசேடமாக சிறுபான்மை இன மக்களைப் பாதுகாப்பதற்கான ஆணைக்குழு ஒன்றை இலங்கை அரசு உருவாக்க வேண்டும்.
தமிழ், முஸ்லிம் சமூகங்களில் தாக்கம் செலுத்தும் விடயங்களான வடக்கிலிருந்து படையினரை அகற்றுதல், காணாமல்போனோர் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எந்தவொரு சமூகத்துக்கும் அநீதி ஏற்படாத வகையில் சமத்துவம் நிறுவன ரீதியாகவும், சட்டரீதியாகவும் உறுதிப்படுத்த வேண்டும். சிறுபான்மை இன மக்களைப் பாதுகாப்பானவர்களாக உணரவைப்பது சமூகங்களுக்கு இடையிலான பதற்றத்தை தணிக்க உதவும்.
எனவே, தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்காக நான் முன்வைத்த பரிந்துரைகளை இலங்கை அரசு தெளிவான குறிக்கோளுடனும், சிறந்த கட்டமைப்புடனும், கால அட்டவணையுடனும் நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கின்றேன்” – என்றார்.